PUBLISHED ON : ஜன 18, 2025 12:00 AM

'கட்சிக்குள் உள்ள பஞ்சாயத்தையே தீர்த்து வைக்க முடியவில்லை; இதில், புது பஞ்சாயத்து வேறா...?' என புலம்புகிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், ஏக்நாத் ஷிண்டே, தன் முதல்வர் பதவியை பா.ஜ.,வின் தேவேந்திரபட்னவிசிடம் தாரைவார்க்க வேண்டி இருந்தது.
இதனால், சோகத்தில் மூழ்கியுள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இந்த நிலையில் தான், 'மஹாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் நடந்து வரும் அன்னதான திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் சிர்சத் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
'தினமும் இலவசமாக சாப்பாடு போடுவதால், ஷீரடியில் பிச்சைக்காரர்கள் அதிகரித்து விட்டனர்; இவர்களால் குற்றங்களும் அதிகரித்து விட்டன...' என்கிறார், சஞ்சய் சிர்சத்.
இதற்கு, ஷீரடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ண விகேஷ் பாட்டீல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'தேவையில்லாத விஷயங்களை பேசினால், கூட்டணியே முறிந்து விடும்...' என, பாட்டீல் எச்சரித்துள்ளார்.
இதை பார்த்த ஏக்நாத் ஷிண்டே, 'துணை முதல்வர் பதவிக்கும் வேட்டு வைத்து விடுவர் போலிருக்கிறதே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார்.