PUBLISHED ON : ஜன 15, 2024 12:00 AM

'எதற்கு இந்த வீண் வேலை...' என, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானைப் பற்றி கிண்டலடிக்கின்றனர், இங்குள்ள, காங்., கட்சியினர்.
சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை; மோகன் யாதவ் என்ற புதுமுகத்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
தனக்கு முதல்வர் பதவி கிடைக்காதததை, சவுகானால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. நெருக்கமானவர்களை அழைத்து, முதல்வர் பதவி கிடைக்காததற்கான காரணம் என்னவாக இருக்கும் என தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
அப்போது சிலர், 'ம.பி.,யில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக இதுவரை பதவி வகித்து வந்த பலரும், அரசியலில் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்.
'இமர்தி தேவி, குசும் மெகாலே, மாயா சிங், அர்ச்சனா, ரஞ்சனா பாகேல் போன்றோர், இந்த துறையின் அமைச்சர்களாக பதவி வகித்த பின், கடும் சரிவை சந்தித்தனர். கடைசியாக நீங்கள் இந்த துறையின் அமைச்சராக இருந்தீர்கள். அந்த, 'சென்டிமென்ட்' உங்கள் பதவியையும் காவு வாங்கி விட்டது...' என்றனர்.
இதை கேள்விப்பட்ட எதிர்க்கட்சியினர், 'பதவி போய் விட்டது. இனி காரணத்தை தேடி என்ன பயன்...' என, கிண்டலடிக்கின்றனர்.