
'ஆந்திராவில் தான், அண்ணன் - தங்கை சண்டை நடந்தது என்றால், நம் மாநிலத்திலும் அதே பிரச்னையா...' என, கிண்டல் அடிக்கின்றனர், தெலுங்கானா மாநில அரசியல்வாதிகள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்.
கட்சியில் தனக்குப் பின், தன் அரசியல் வாரிசாக யாரை நியமிப்பது என்பதில் அவர் குழப்பத்தில் உள்ளார். அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்.
ஆனால், அவரது சகோதரியும், எம்.எல்.சி.,யுமான கவிதா, கட்சி தலைவர் பதவியை அடைவதற்காக தனக்கென ஒரு ஆதரவு பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.
'கட்சியை அழிப்பதற்கான முயற்சி நடக்கிறது. இதற்காக என்னை கொலை செய்யவும் சதி நடக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களே இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர்...' என, தன் அண்ணன் ராமாராவ் மீது நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார், கவிதா.
'ஆந்திராவில், முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது சகோதரி ஷர்மிளாவுக்கும் நடந்த சண்டை இப்போது தான் ஓய்ந்துஇருக்கிறது. இப்போது தெலுங்கானாவில் சகோதர சண்டை துவங்கி விட்டதா...' என, மற்ற கட்சியினர் புலம்புகின்றனர்.