PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM

‘இதுபோன்ற ஐடியாவை இவர்களுக்கு யார் தந்தது என தெரியவில்லையே...?’ என, சமாஜ்வாதி கட்சியினரின் தேர்தல் வியூகம் குறித்து ஆச்சரியப்படுகின்றனர், உத்தர பிரதேச மாநில மக்கள்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு மார்ச்சில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது.
உ.பி.,யில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர், மத கலவரங்களில் ஈடுபடுவோரின் வீடுகளை, முதல்வர் ஆதித்யநாத், ‘புல்டோசர்’ வாயிலாக இடித்து தள்ளி வருகிறார். இந்த நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் வரவேற்றாலும், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இதை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ், சமீபத்தில் உ.பி.,யின் ரேபரேலியில் பிரமாண்ட பேரணி நடத்தினார். அவர் வரும் வழியில் ஏராளமான புல்டோசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மலர்களை குவித்து வைத்து, அகிலேஷ் யாதவ் மீது துாவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து பேசிய அகிலேஷ் யாதவ், ‘இந்த புல்டோசர்கள் வீடுகளை இடிப்பதற்காக கொண்டு வரப்பட்டவை அல்ல; மலர்கள் துாவுவதற்காக கொண்டு வரப்பட்டவை...’ என, மறைமுகமாக யோகி ஆதித்யநாத்தை சாடினார்.
உ.பி., மக்களோ, ‘புல்டோசர் கலாசாரத்தையும் உ.பி.,யையும் பிரிக்க முடியாது போலிருக்கிறதே...’ என கிண்டல் அடிக்கின்றனர்.
