PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM

புறக்கணிக்கலாமா?
'தன்னை தவிர கட்சியில் வேறு யாரும் முக்கிய பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் போலிருக்கிறது...' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பற்றி எரிச்சலுடன் பேசுகின்றனர், அந்த கட்சித் தொண்டர்கள்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்குள் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
லாலு பிரசாத்தின் இளைய மகன் தான், தேஜஸ்வி யாதவ். இவர் தான், தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவராக உள்ளார். லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்.
இந்நிலையில், லாலுவின் மகள் ரோஹிணி ஆச்சார்யாவும், தேஜஸ்விக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார். லாலுவுக்கு, 2022ம் ஆண்டு சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டது. ரோஹிணி ஆச்சார்யா, தன் ஒரு சிறுநீரகத்தை லாலுவுக்கு தானமாக வழங்கி, அவரது உயிரை காப்பாற்றினார்.
இந்நிலையில், ரோஹிணியை, அவரது சகோதரர் தேஜஸ்வி யாதவ், கட்சியிலிருந்து ஓரங்கட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'லாலுவின் உயிரை காப்பாற்றிய ரோஹிணியை, தேஜஸ்வி புறக்கணிப்பது நியாயமா...?' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் புலம்புகின்றனர்.