PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

'நமக்கு முட்டுக்கட்டை போடுவது தான் இவரது வேலையாக இருக்குமோ...' என, கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில காங்., தலைவருமான சிவகுமார் பற்றி கூறுகின்றனர், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள்.
கர்நாடக காங்கிரசில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் இடையிலான கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தில் உள்ளது. முதல்வர் பதவியை எப்படியாவது சித்தராமையாவிடம் இருந்து தட்டிப்பறிக்க துடியாய் துடிக்கிறார், சிவகுமார். சித்தராமையாவோ, முதல்வர் நாற்காலியில், 'பெவிகால்' போட்டு அமர்ந்திருக்கிறார்.
சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்...' என பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சித்தராமையா உள்ளிட்ட கர்நாடக அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 'கமல், தன் பேச்சிற்கு மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும்...' என, சித்தராமையா ஆவேசப்பட்டார்.
சிவகுமாரிடம் இதுகுறித்து கேட்டபோது, 'கன்னடர்களும், தமிழர்களும் சகோதரர்கள். அரசியல் லாபத்துக்காக எங்களை எதிரிகளாக்காதீர்கள்...' என, முகத்தில் அடித்தாற்போல் கூறி விட்டார்.
இதைக் கேள்விப்பட்ட சித்தராமையா ஆதரவாளர்கள், 'ஒருவேளை இந்த விவகாரத்தில், எங்கள் தலைவர், கமலை ஆதரித்து பேசியிருந்தால், சிவகுமார் எதிர்த்து பேசியிருப்பார். எங்கள் தலைவருடன் மல்லுக்கட்டுவது தான் இவரது குறிக்கோளாக உள்ளது...' என, புலம்புகின்றனர்.