PUBLISHED ON : மார் 18, 2024 12:00 AM

'பாவம், இவரது நிலைமையை நினைத்தால் பரிதாபமாகத் தான் உள்ளது...' என, மத்திய அமைச்சரான பசுபதி குமார் பரஸ் பற்றி கவலைப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
பீஹாரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் செல்வாக்கான அரசியல் கட்சியாக உள்ளது, லோக் ஜன்சக்தி கட்சி. தலித் சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் கட்சி இது.
கடந்த, 2020ல் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார். இதையடுத்து, அந்த கட்சி இரண்டாக பிரிந்தது. அவரது மகன் சிராக் ஒரு பிரிவாகவும், சகோதரர் பசுபதி குமார் பரஸ் மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டு வந்தனர்.
பசுபதி குமார் பரஸ் தலைமையிலான அணி, தே.ஜ., கூட்டணியில் இணைந்தது. மத்திய அமைச்சராக அவர் பதவி வகித்து வருகிறார்.
தற்போது, லோக்சபா தேர்தல் நெருங்குவதை அடுத்து, பீஹாரில், சிராக் தரப்பிற்கே அதிக ஆதரவு இருப்பதாக, உள்ளூர் பா.ஜ.,வினர், கட்சி மேலிடத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, பா.ஜ., மேலிடம், சிராக் பஸ்வானுடன் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது; பசுபதி தரப்பை பொருட்படுத்தவில்லை.
இதனால் கலக்கம் அடைந்துள்ள பசுபதி, 'இத்தனை நாட்களாக, பா.ஜ.,வுடனேயே பயணித்து வருகிறேன். என்னை நம்பி ஏராளமான கட்சி நிர்வாகிகள் உள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி என்னை நடுத்தெருவில் நிறுத்தினால் எப்படி...' என, கண்களை கசக்குகிறார்.

