PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM

'காலம் கடந்த ஞானோதயம்...' என, பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவை கிண்டல் அடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.
தேஜஸ்வி யாதவ், பீஹார் முன்னாள் முதல்வரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் மகன். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய தேஜஸ்வியை, தன் அரசியல் வாரிசாக அறிவித்த லாலு பிரசாத், அவரை எப்படியாவது முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என, துடியாய் துடிக்கிறார்.
அரசியலுக்கு வரும் முன், தேஜஸ்வி யாதவ் பீஹார், டில்லி போன்ற உள்ளூர் அணிகளுக்காக கிரிக்கெட் போட்டிகளில்விளையாடினார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தேஜஸ்வி யாதவ், 'நான் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரன். உள்ளூர் அணிகளுக்காக பல போட்டிகளில் விளையாடி உள்ளேன்.
'தற்போது சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள விராட் கோலி உட்பட நம் நாட்டைச் சேர்ந்த பிரபல வீரர்கள் பலர், என் தலைமையின் கீழ் விளையாடியவர்கள். அவர்களுக்கு கேப்டனாக இருந்துள்ளேன்.
'தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்தால், சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாகியிருப்பேன். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன்...' என, மனம் திறந்து பேசினார்.
எதிர்க்கட்சியினரோ, 'கிரிக்கெட்டில் சாதிக்க முடியவில்லை என்பதால் தான், இவர் அரசியலுக்கு வந்தார்;இப்போது தியாகி போல் பேசுகிறார்...' என, 'கமென்ட்' அடிக்கின்றனர்.

