PUBLISHED ON : பிப் 18, 2024 12:00 AM

'எனக்கு எதிரிகள் வெளியில் இல்லை; கட்சிக்குள்ளேயே இருக்கின்றனர்...' என கவலைப்படுகிறார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கான வியூகங்களை வகுக்கும் பணியில், அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மம்தா பானர்ஜியும், தன் கட்சி நிர்வாகிகளை அழைத்து விரிவான ஆலோசனை நடத்தி, தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.
திடீர் திருப்பமாக, சந்தேஷ்காலி என்ற பகுதியைச் சேர்ந்த, திரிணமுல் கட்சி நிர்வாகி ஷாஜகான் என்பவரது நடவடிக்கையால், மம்தாவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த பலரது நிலங்களை அபகரித்ததாக, ஷாஜகான் மீது ஏற்கனவே புகார் உள்ளது.
இந்நிலையில், இதற்காக போராடிய பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக, சந்தேஷ்காலி பகுதியில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் போராட்டம் தீவிரமடைந்தால், ஓட்டு வங்கியில் பாதிப்பு ஏற்படுமே என்ற கவலை மம்தாவுக்கு ஏற்பட்டுள்ளது.
'எதிர்க்கட்சியினர் தரும் தொல்லையையாவது சமாளித்து விடலாம். கட்சிக்குள் இருந்தபடியே குடைச்சல் கொடுப்பவர்களை சமாளிப்பது தான், கடினமாக உள்ளது...' என புலம்புகிறார், மம்தா.