PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

'கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்பதில்,உறுதியாக இருக்கிறார் போலிருக்கிறது...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் குறித்து கூறுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு பா.ஜ., சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் செல்வாக்கு பெற்ற பின், காங்கிரஸ்பின்னுக்கு தள்ளப்பட்டது. தேர்தல்களில் கூட்டணிஅமைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் வெற்றி என்பது காங்கிரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருந்து வந்தது.
ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது; காங்கிரஸ் மூத்த தலைவர்களாலேயே, இந்த வெற்றியை நம்பமுடியவில்லை.
'இந்த வெற்றியை அடுத்தடுத்த தேர்தல்களிலும் தக்க வைக்க வேண்டும்' என்ற எண்ணம், ராகுலுக்கு ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவரும், அவரது சகோதரி பிரியங்காவும் அடிக்கடி உ.பி.,க்கு சுற்றுப் பயணம் செய்து, கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
மேலும், உ.பி., மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்க்கும் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். அவரும், பா.ஜ., அரசுக்கு எதிராக தொண்டர்களை திரட்டி, தினமும் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
'வரும், 2027 சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் வரை, எங்கள் போராட்டம் ஓயாது...' என்கின்றனர், உ.பி., காங்கிரசார்.

