PUBLISHED ON : ஆக 07, 2025 12:00 AM

'தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது பிரச்னை அல்ல; கூட்டணியில் உள்ளவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது தான் பிரச்னை...' என, புலம்புகிறார், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு.
ஆந்திராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணியில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, பா.ஜ., ஆகிய கட்சிகள் இடம் பெற்றன. தெலுங்கு தேசத்துக்கு பெரும்பான்மை கிடைத்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளித்தார், நாயுடு.
பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும், அவரது கட்சியில் மேலும் மூவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்தார். பா.ஜ.,வில் ஒருவருக்கும் அமைச்சர் பதவி அளித்தார்.
தற்போது, ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேலாகி விட்ட நிலையில், அமைச்சரவையில் தங்களுக்கு மேலும் பங்கு வேண்டும் என கூட்டணி கட்சிகள் கொடி பிடிக்கத் துவங்கியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.,க்களும் நச்சரித்து வருகின்றனர்.
இதையடுத்து, விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார், நாயுடு. தற்போதுள்ள ஆறு அமைச்சர்களின் பதவியை பறித்துவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளார்.
ஆயினும், கூட்டணி கட்சிகளில் எத்தனை பேருக்கு இடமளிப்பது, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப் படுவோரின் அதிருப்தியை எப்படி சமாளிப்பது என தெரியாமல், பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார், சந்திரபாபு நாயுடு.