PUBLISHED ON : அக் 29, 2024 12:00 AM

'பிள்ளையார் சுழி போடுவதற்கு முன் பிரச்னையைதுவக்கி விட்டனரே...' என கவலைப்படுகிறார், காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா.
இவரது சகோதரர் ராகுல், கேரள மாநிலம், வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலிஎன, இரண்டு லோக்சபா தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், வயநாடு எம்.பி., பதவியில் இருந்து விலகினார்.
இந்த தொகுதிக்கு நவ.,13ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார். இதற்கு முன், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, பல மாநிலங்களிலும் பிரசாரம் செய்துள்ளார், பிரியங்கா.
இப்போது தான் முதல் முறையாக, தேர்தல் அரசியலில் களம் இறங்குகிறார். இதனால், எந்தபிரச்னையும் இல்லாமல் வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் பிரியங்காவிடம் உள்ளது.
சமீபத்தில், பிரமாண்ட ஊர்வலத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அடுத்த நாளே பிரச்னை ஆரம்பமாகி விட்டது. வேட்பு மனு தாக்கலின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை வெளியில் நிற்க வைத்ததாக சர்ச்சை கிளம்பியது.
இதற்கு விளக்கம் சொல்லி முடிப்பதற்குள், 'வேட்பு மனு தாக்கலின் போது பிரியங்கா மற்றும் அவரது கணவரின் சொத்து பற்றிய முழு விபரங்களையும் தாக்கல் செய்யவில்லை. அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்...' என, பா.ஜ.,வினர் புகார் கூறியுள்ளனர்.
'இப்பவே கண்ணை கட்டுதே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், பிரியங்கா.