PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM

'இவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடம் ஏன் தயங்குகிறது...' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பற்றி விரக்தியுடன் கேட்கின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நான்கு முறை லோக்சபாவுக்கு தேர்வு செய்யப் பட்டவர், சசி தரூர். சமீப காலமாகவே காங்கிரஸ் மேலிடத்துக்கும், இவருக்கும் ஆகவில்லை.
'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக சசி தரூர் செயல்பட்டதாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது; அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில் தான், சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரியை, பார்லிமென்டில் பாராட்டி தள்ளினார், சசி தரூர்.
'நிதின் கட்கரி சாலை போக்குவரத்து துறை அமைச்சராவதற்கு முன், அந்த துறையில் ஊழல் மலிந்திருந்தது. எல்லா வேலையிலும் கமிஷன் கலாசாரம் பெருக்கெடுத்து இருந்தது. அவர், அமைச்சரான பின் எல்லாம் மாறி விட்டது. நாடு முழுதும் மேற்கத்திய நாடுகளுக்கு நிகராக சாலைகள் பளிச்சிடுகின்றன...' என்றார், சசி தரூர்.
காங்., கட்சியினரோ, 'நிதின் கட்கரி, 2014ல் அமைச்சராவதற்கு முன், காங்கிரஸ் தானே மத்தியில் ஆட்சியில் இருந்தது. சசி தரூரும், அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தாரே... இவரது துறையிலும் கமிஷன் கலாசாரம் இருந்ததா...?' என, காட்டமாக கேள்வி எழுப்புகின்றனர்.