PUBLISHED ON : செப் 21, 2025 12:00 AM

'என்ன இது, புது அவதாரம்; ஒன்றும் புரியவில்லையே...' என, காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் நடவடிக்கைகளை பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர், அந்த கட்சியின் கேரள மாநில நிர்வாகிகள்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு மத்தியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
தொடர்ந்து, இரண்டு சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்வராகபோவது யார் என்பதில், கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே இப்போதே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இங்குள்ள வயநாடு லோக்சபா தொகுதியின் எம்.பி.,யான பிரியங்காவும் திடீரென களத்தில் குதித்துள்ளார். சமீபத்தில் வயநாடு தொகுதிக்கு உட்பட்ட நிலம்பூர் பகுதிக்கு பிரியங்கா வந்திருந்தார்.
இங்கு, பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிக்கு முறையான சாலை வசதிகள் இல்லை. மலை, நீரோடை போன்றவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பழங்குடியின மக்கள் உதவியுடன், கரடு முரடான பாறைகளில் ஏறி இறங்கி, அந்த பகுதிக்கு சென்ற பிரியங்கா, அங்கு வசிக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதை பார்த்த கேரள மாநில காங்., தலைவர்கள், 'முதல்வர் பதவிக்கு நாம் முட்டி மோதும் நிலையில், புதிதாக பிரியங்காவும் போட்டிக்கு வருவாரோ...?' என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.