PUBLISHED ON : ஜன 03, 2024 12:00 AM

'எவ்வளவோ கெஞ்சியும் மனம் இரங்கவில்லையே...' என கவலைப்படுகிறார், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா.
இங்கு, ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக பதவி வகித்தவர், வசுந்தரா. குவாலியர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, பா.ஜ., வெற்றி பெற்றால், தனக்குத் தான் முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆனால், பஜன்லால் சர்மா என்ற புதுமுகத்தை முதல்வராக அறிவித்து விட்டது, பா.ஜ., மேலிடம். இந்த கவலையை வசுந்தரா வெளியில் காட்டவில்லை என்றாலும், கட்சியில் உள்ள தன் தீவிர விசுவாசிகளை அழைத்து தினமும் புலம்புகிறார்.
'ஐந்து ஆண்டுகள் இல்லை என்றாலும், முதல் ஒரு ஆண்டு மட்டுமாவது முதல்வராக இருக்க அனுமதியுங்கள். அதன்பின், கவுரவமாக அரசியலில் இருந்து நானே ஒதுங்கிக் கொள்கிறேன் என மேலிட தலைவர்களிடம் கெஞ்சினேன். ஆனாலும், என்னை புறக்கணித்து விட்டனர்...' என, கண்ணீருடன் கூறியுள்ளார், வசுந்தரா.
'உள்ளூரில் செல்வாக்கு பெற்ற இவரிடம், கட்சி மேலிடம் கொஞ்சம் கரிசனம் காட்டியிருக்கலாம்...' என அனுதாபப்படுகின்றனர், வசுந்தராவின் விசுவாசிகள்.