PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM

'தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது என்பது கூடவா, இவருக்கு தெரியாமல் போய் விட்டது...' என, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரான அஜித் பவார், துணை முதல்வராக உள்ளார்.
இங்குள்ள சோலாபூரில் சட்டவிரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு சமீபத்தில் சென்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி அஞ்சனா, குவாரியை மூடும்படி உத்தரவிட்டார்.
அப்போது, மணல் குவாரி உரிமையாளரான தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகி, அஜித் பவாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்தார்.
இதையடுத்து, போனை அஞ்சனாவிடம் கொடுக்கும்படி கூறிய அஜித் பவார், 'அந்த மணல் குவாரியை அகற்றக் கூடாது. நீங்கள், உடனே அங் கிருந்து கிளம்புங்கள்...' என, மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அஜித் பவாருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
'பக்குவமான அரசியல் தலைவரான அஜித் பவார், சட்டவிரோத குவாரி விஷயத்தில் எல்லாம் தலையிட்டு, தன் பெயரை கெடுத்துக் கொள்கிறார்; இது, அவரது எதிர்கால அரசியலுக்கு ஆபத்து...' என, கவலையுடன் கூறுகின்றனர், அவரது நலம் விரும்பிகள்.