PUBLISHED ON : மே 18, 2025 12:00 AM

'ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதி பெரிதுபடுத்தி, பதவியை காலி செய்து விட்டனரே...' என, கண்ணீர் வடிக்கிறார், கேரள மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளுமே, தங்கள் நிர்வாகத்தில் அதிரடியான மாற்றங்களை செய்து வருகின்றன.
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரனுக்கு, 75 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய தலைவரை நியமிக்கும்படி, அவரது அதிருப்தியாளர்கள் குரல் எழுப்பி வந்தனர்.
இதனால், கடுப்பில் இருந்தார் சுதாகரன். சமீபத்தில் தன் சொந்த ஊரான கண்ணுாருக்கு சென்ற அவரை, கட்சியினர் செண்டை மேளம் இசைத்து வரவேற்றனர். அப்போது, ஒரு இசைக் கலைஞரிடம் இருந்து செண்டை மேளத்தை வாங்கி, சில நிமிடங்கள் வாசித்தார் சுதாகரன்.
அங்கிருந்த தன் ஆதரவாளர்களிடம், 'எவ்வளவு அழகாக செண்டை மேளம் வாசித்தேன்; எனக்கா வயதாகி விட்டது...' என, பெருமிதத்துடன் கூறினார்.
ஆனாலும், அடுத்த சில நாட்களிலேயே, தலைவர் பதவியில் இருந்து சுதாகரனை துாக்கிவிட்டு, ஜோசப் என்பவரை நியமித்து விட்டது, காங்கிரஸ் மேலிடம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகரன், 'அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகி விட்டனவே...' என, புலம்புகிறார்.