PUBLISHED ON : நவ 26, 2025 12:00 AM

'நேர்மையானவராக இருந்தால், சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும்...' என, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை பார்த்து கிண்டல் அடிக்கின்றனர், பீஹார் மாநில ஆளுங்கட்சியினர்.
பீஹாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. நிதிஷ் குமாரும், முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
இந்த தேர்தலில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும், ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கி, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.
பிரசாரத்தின் போது, 'இந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 25க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். இந்த எண்ணிக்கைக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியலை விட்டே விலகி விடுகிறேன்...' என, சபதம் செய்திருந்தார் பிரசாந்த் கிஷோர்.
ஆனால், இந்த தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், ஆட்சியையும் தக்க வைத்தது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து, 'பிரசாந்த் கிஷோருக்கு பீஹார் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பது உறுதியாகி விட்டது. எனவே, தான் கூறியபடி, அரசியலுக்கு முழுக்கு போடுவதற்கு அவருக்கு இது நல்ல வாய்ப்பு...' என, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் கூறுகின்றனர்.

