PUBLISHED ON : டிச 14, 2024 12:00 AM

'சரியான நேரம் பார்த்து, அனைவரும் காலை வாருகின்றனரே...' என கவலையில் ஆழ்ந்துள்ளார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ.,வை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, 'இண்டியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்தன.
இந்த கூட்டணியின்தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும்,பெரிய கட்சி என்ற முறையில், காங்கிரசின் ராகுல் தான், அதிகாரப்பூர்வமற்ற வகையில் தலைவர் போல் செயல்பட்டார்.
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ராகுல் தான் பிரதமர் என்றும் பேசப்பட்டது. ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்ததால், அதற்கு வேலையில்லாமல் போய் விட்டது.
இந்த நிலையில் தான், தேசியவாத காங்கிரஸ்சரத் சந்திர பவார் பிரிவு தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் போன்ற மூத்த தலைவர்கள், சமீபகாலமாக ஒரு முக்கிய பிரச்னையை எழுப்பி உள்ளனர்.
'இண்டியா கூட்டணிக்கு திரிணமுல் காங்., தலைவர் மம்தா தலைவரானால், அவருக்கு ஆதரவுதர தயார். கூட்டணிக்கு தலைமையேற்கும் அனைத்து தகுதியும் அவருக்கு உள்ளது...' என, அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இதை கேள்விப்பட்ட ராகுல், 'கூடவே இருந்து குழி பறிப்பது இதுதான் போலிருக்கிறது...' என புலம்புகிறார்.