PUBLISHED ON : அக் 06, 2024 12:00 AM

'கிண்டலுக்கு பேசுகிறாரா அல்லது நிஜமாகவே பேசுகிறாரா என்று தெரியவில்லை...' என, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் குறித்து கூறுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்த லில் இந்த கூட்டணிக்குபெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணிக்கு கணிசமான இடங்கள் கிடைத்தன.
அடுத்த சில மாதங்களில், மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடக்க வுள்ளது. ஆளுங்கட்சி கூட்டணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவு என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், அந்த கூட்டணியினரிடையே ஒருவித சோர்வு காணப்படுகிறது.
இந்த நிலையில் தான், மும்பையில் சமீபத்தில்நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தேவேந்திர பட்னவிஸ், 'அடுத்ததும் எங்கள் ஆட்சி தான். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்போம்...' என்றார்.
இதைக் கேட்டதும், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் முகங்களில் எந்தவித உணர்வும் தென்படவில்லை. 'தேவேந்திர பட்னவிஸ் நம்மை வைத்து காமெடி பண்ணுகிறார் போலிருக்கிறது...' என, அவர்கள் முணுமுணுத்ததை காண முடிந்தது.