PUBLISHED ON : டிச 11, 2025 03:46 AM

'அரசியலில் துரோகம் செய்வது சகஜமான விஷயம் தான். அதற்காக, 24 மணி நேரமும் என்னை பீதியிலேயே வைத்திருந்தால் எப்படி...' என புலம்புகிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திரபட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மறைந்த பால் தாக்கரே நிறுவிய சிவசேனா, தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்படுகின்றன. அதிகாரப்பூர்வமான சிவசேனா, இப்போதைய, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இயங்குகிறது. பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா - உத்தவ் என்ற கட்சி தனியாக செயல்படுகிறது.
தங்களிடம் இருந்து, கட்சியையும், சின்னத்தையும் அபகரித்து விட்டதாகவும், தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், ஏக்நாத் ஷிண்டே மீது, உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், 'இன்னும் சில மாதங்களில், ஏக்நாத் ஷிண்டேயிடம் இருக்கும் அனைத்து, எம்.எல்.ஏ.,க்களையும், பா.ஜ., அபகரித்து விடும்...' என, உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
இதை கேள்விப்பட்ட ஏக்நாத் ஷிண்டே, 'எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என, ஆதித்ய தாக்கரே நினைக்கிறார் போலிருக்கிறது...' என, கவலையுடன் கூறுகிறார்.

