PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM

‘நம் ஆயுதத்தை எடுத்து, நம் மீதே ஏவுகின்றனரே; இந்த விஷயத்தில் கொஞ்சம் உஷாராகத் தான் இருக்க வேண்டும்...’ என வருத்தப்படுகிறார், கேரள மாநில அரசின் காங்கிரஸ் முதல்வரான சதீசன்.
இந்தாண்டு துவக்கத்தில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறி, தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வலியுறுத்தி, காங்., தலைவர்கள் டில்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் நடந்த குளறுபடி காரணமாகவே, மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். தேர்தல் கமிஷனுக்கு எதிராக, காங்., – எம்.பி., ராகுல் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இந்நிலையில், கேரள மாநில பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜிவ் சந்திரசேகர், ‘வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக காங்., கட்சியினர் கூறுகின்றனர். கேரளாவிலும், கடந்த ஏப்ரலில் தான் சட்டசபை தேர்தல் நடந்தது. ஆனால், அந்த தேர்தலில் காங்., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
‘இங்கு, வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடக்கவில்லையா? உங்கள் குற்றச்சாட்டு உண்மை என்றால், கேரளாவில் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க காங்., தலைவர்கள் தயாரா...?’ என, சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதை எதிர்பார்க்காத சதீசன், ‘டில்லியில் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தை காரணமாக வைத்தே, என் பதவியை பறிக்கப் பார்க்கின்றனரே...’ என புலம்புகிறார்.
