
'அவரும் என்னென்னவோ சொல்லி பார்க்கிறார்... ஆனால், எந்த தாக்கமும் ஏற்படவில்லையே...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
மத்திய பா.ஜ., அரசு, தலைமை தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வதாக, ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய ராகுல், சில புள்ளி விபரங்களை காட்டி, கடந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் முறைகேடு செய்து, பா.ஜ., வெற்றி பெற்றதாக கூறினார்.
இதேபோல், மஹாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலிலும் முறைகேடு நடந்ததாக கூறினார்.
அப்போது, 'தேர்தல் ஆணையமும், பா.ஜ.,வும் செய்த முறைகேடு குறித்த இந்த தகவல்கள், அணுகுண்டு வெடித்தது போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் சில மாதங்கள் கழித்து, ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும்...' என்றும் கூறியிருந்தார் ராகுல்.
சமீபத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், ஹரியானா சட்டசபை தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, 'இது தான் ஹைட்ரஜன் குண்டு. இந்த குண்டுவெடிப்பில், தேர்தல் ஆணையத்தின் சதி அம்பலப்படப் போகிறது...' என்றார்.
ஆனால், அவரது குற்றச்சாட்டுகள், நாடு முழுதும் உள்ள மக்களிடையே எந்தவித தாக்கத்தையோ, விளைவுகளையோ ஏற்படுத்தவில்லை.
இது பற்றி காங்., கட்சியினர் கூறுகையில், 'நம் தலைவர் அவ்வப்போது வந்து சில வெடிகுண்டுகளை வீசுகிறார்; ஆனால், எதுவும் வெடிக்கவில்லை. எல்லாமே ஊமை வெடிகளாகவே உள்ளன...' என, புலம்புகின்றனர்.

