PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM

'இந்த முறை வெற்றி பெறுவதற்கு சிரமப்படத் தான் வேண்டியிருக்கும் போலிருக்கிறது...' என கவலைப்படுகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கடந்த லோக்சபா தேர்தலின் போதும், இங்கு மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி தான் ஆளுங்கட்சியாக இருந்தது. ஆயினும், இடதுசாரி கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 'இந்த முறையும் கோட்டை விட்டால், ஆளுங்கட்சியாக இருந்து எந்த பயனும் இல்லை' என, மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறி வந்தனர்.
மொத்தமுள்ள 20 தொகுதிகளையும் வாரி சுருட்ட வியூகம் வகுத்து வந்தனர். ஆனால், சமீபகாலமாக கேரளாவில் ஆளுங்கட்சிக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜ., போன்ற எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி, அரசை கிடுகிடுக்க வைக்கின்றன.
பிரதமர் மோடியும், அடிக்கடி கேரளாவுக்கு வந்து செல்கிறார். திருச்சூர் தொகுதியில் பிரபல நடிகர் சுரேஷ் கோபியை வேட்பாளராக பா.ஜ., நிறுத்தி உள்ளது.
சமீபத்தில், வயநாட்டில் கால்நடை பல்கலையில்படித்த மாணவரை, ஆளுங்கட்சி மாணவர் அமைப்பினர், 'ராகிங்' செய்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதை மையமாக வைத்து, மாநிலம் முழுதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முடுக்கி விட்டுள்ளன.
இதையடுத்து, 'இந்த முறையும் வெற்றி கைநழுவி விடுமோ...' என புலம்புகிறார், பினராயி விஜயன்.

