PUBLISHED ON : அக் 21, 2024 12:00 AM

'இவர் சொல்வதை எப்படி நம்புவது என்று தெரியவில்லை...' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து கூறுகின்றனர், பா.ஜ., வினர்.
ஆறு மாதங்களுக்கு முன் நடந்த லோக்சபா தேர்தலின்போது, காங்கிரசின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கி விட்டதாக, மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.
'தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு பழி வாங்குகின்றனர். வேட்பாளர்களுக்கு செலவிட கூட எங்களுக்கு பணம் இல்லை. எங்களை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, எங்கள் வங்கி கணக்குகளை முடக்கி விட்டனர்...' என, அழுது புலம்பினார்.
ராகுல் உள்ளிட்ட காங்கிரசின் மற்ற தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தின்போது, இதையே திரும்ப திரும்ப கூறினர்; இது, மக்களிடம் ஒருவித அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் சார்பில், 585 கோடி ரூபாய் செலவிட்டது தெரியவந்துள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்களின் விமான பயணங்களுக்காக மட்டும், 105 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நன்கொடையாக மட்டுமே, 539 கோடி ரூபாய் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதை கேள்விப்பட்ட பொதுமக்கள், 'அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது; எப்படி வருகிறது என தெரியவில்லை. எல்லாம் மர்மமாகவே இருக்கிறது...' என, ஆச்சரியப்படுகின்றனர்.

