PUBLISHED ON : மார் 18, 2025 12:00 AM

'சினிமாவில் கூட இவ்வளவு, 'பல்டி' அடித்திருப்பாரா என்பது சந்தேகம் தான்...' என, பிரபல நடிகையும், தெலுங்கானா எம்.எல்.சி.,யுமான விஜயசாந்தி பற்றி ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தெலுங்கு சினிமாவில், 'லேடி அமிதாப்பச்சன்' என, பாராட்டு பெற்றவர், விஜயசாந்தி.
தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆக்ரோஷமான சண்டை காட்சிகளில் அதிரடியாக நடித்து வில்லன்களை துவம்சம் செய்வார். சினிமாவில் இவர் வெற்றிகரமான நடிகையாக இருந்தாலும், அரசியல் மட்டும் அவ்வளவாக கை கொடுக்கவில்லை.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே பா.ஜ.,வில் இணைந்தார். அதன்பின், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியில் சேர்ந்தார். எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் காங்கிரசில் இணைந்தார்.
அங்கும், அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் பா.ஜ.,வில் சேர்ந்தார். மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்த அவர், இப்போது மீண்டும் காங்கிரசில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது அவருக்கு, எம்.எல்.சி., பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
'விஜயசாந்திக்கு சினிமாவில் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்த அனுபவம் இருப்பதால், அரசியலிலும் அடிக்கடி தாவுகிறார். இனியாவது ஒரே கட்சியில் இருப்பாரா அல்லது மறுபடியும் தாவுவாரா என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்...' என்கின்றனர், தெலுங்கானா மக்கள்.