PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

'பரவாயில்லையே; இவ்வளவு சீக்கிரம் எல்லாருக்கும் பிடித்த மனிதராக மாறி விட்டாரே...' என, மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு பற்றி எதிர்க்கட்சியினரே ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.
கிரண் ரிஜிஜு, வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, மத்திய அரசில் முக்கியமான பதவி கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்தது.
மோடி பிரதமரானதும், கிரண் ரிஜிஜுவை முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையின் இணை அமைச்சராக நியமித்தார். அதன்பின், சட்டத்துறை அமைச்சராகவும் நியமித்தார்.
இந்த துறைகள் தொடர்பாக, பார்லிமென்டில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும் போதெல்லாம், அவர்களுடன் மோதல் போக்கை பின்பற்றுவதை ரிஜிஜு வழக்கமாக வைத்திருந்தார்.
மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றதும், கிரண் ரிஜிஜுவுக்கு பார்லிமென்ட் விவகாரத் துறையை கொடுத்தார். இதன்பின், ரிஜிஜுவின் மொத்த நடவடிக்கையும் மாறிவிட்டது.
எதிர்க்கட்சி எம்.பி.,க்களுடன் நட்புடன் பழகத் துவங்கினார். புதியவர், சீனியர் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து எம்.பி.,க்களுடன் சுமுக உறவை பேணுகிறார்.
பார்லிமென்டில் நடக்கும் ஒருசில விவாதங்களின் போது மட்டும் சற்று ஆவேசம் காட்டும் ரிஜிஜு, மற்ற நேரங்களில் சிரித்த முகத்துடன் வளைய வருகிறார்.
இதனால், எல்லா எம்.பி.,க்களுமே, 'தங்கமான மனிதர்...' என, கிரண் ரிஜிஜுவுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கின்றனர்.

