PUBLISHED ON : செப் 23, 2024 12:00 AM

'யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம்; இவரை மட்டும் மன்னிக்கவே கூடாது...' என, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், சரத் பவார் ஆதரவாளர்கள்.
மஹாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார் நிறுவியது தான், தேசியவாத காங்கிரஸ் கட்சி. தன் உறவினர் என்பதால், அஜித் பவாருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளித்து, அவரை வளர்த்து விட்டார், சரத் பவார்.
இதைப் பற்றி கவலைப்படாமல், சரத் பவாருக்கு துரோகம் செய்து விட்டு, எதிர் அணியினருடன் கைகோர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார், அஜித் பவார்.
தேசியவாத காங்கிரசின் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளை தன் பக்கம் வளைத்து, பா.ஜ., சிவசேனாவுடன் கைகோர்த்து, மஹாராஷ்டிரா துணை முதல்வராகி விட்டார். கட்சியும், சின்னமும் தற்போது அவர் வசமே உள்ளன.
கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால், பா.ஜ., சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், அவரை கழற்றி விட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இதையறிந்த அஜித் பவார், 'நான் தவறான முடிவு எடுத்து விட்டேன். உறவினர்களுக்கு துரோகம் செய்து விட்டேன்...' என கூறி, மீண்டும் சரத் பவாருடன் கைகோர்க்க முயற்சித்து வருகிறார்.
சரத் பவார் ஆதரவாளர்களோ, 'ஒருமுறை தவறு செய்தால் மன்னிக்கலாம். இவர் பலமுறை பச்சை துரோகம் செய்து விட்டார். மன்னிக்கவே கூடாது..' என, திட்டவட்டமாக கூறுகின்றனர்.