PUBLISHED ON : பிப் 08, 2025 12:00 AM

'மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாவின் ஆட்டம், இன்னும் சில ஆண்டுகளுக்கு தான்...' என, 'பொடி' வைத்து பேசுகின்றனர், அங்குள்ள பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்.
மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மூன்று முறை தொடர் வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, மம்தாவை வீழ்த்துவதற்கு, பா.ஜ., தலைவர்கள் தங்கள் முழு படைபலத்தையும் பிரயோகித்தனர்.
ஆனாலும், தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வுக்கு ஏமாற்றம் தந்தன. இந்நிலையில், அடுத்தாண்டு மத்தியில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இதில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என, பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதகமாக, திரிணமுல் காங்கிரசிலும் இளம் தலைமுறையினர் இடையே கருத்து வேறுபாடு எழுந்து உள்ளது.
மம்தாவின் உறவினரும், எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜியிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்கும்படி, கட்சியில் உள்ள இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மம்தா இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால், கட்சியில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகி வருவதாக பேச்சு எழுந்துள்ளது.
இதனால், உற்சாகம் அடைந்துள்ள பா.ஜ.,வினர், 'திரிணமுல் கட்சி, மம்தாவிடம் இருந்து விரைவில் அபிஷேக் கைகளுக்கு வந்து விடும். அவரை எங்களால் எளிதாக சமாளித்து விட முடியும். அடுத்த தேர்தல் எங்களுக்கு சாதகமாக இருக்கும்...' என்கின்றனர்.