PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM

'அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; பகைவரும் இல்லை என கூறுவது உண்மை தான் போலிருக்கிறது...' என கிண்டலடிக்கின்றனர், டில்லி அரசியல்வாதிகள்.
ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இவருக்கு முன், காங்கிரசின் பூபிந்தர் சிங் ஹூடா முதல்வராக இருந்தார்.
இங்கு எப்படியாவது இரண்டாவது இடத்துக்கு வந்து விட வேண்டும் என துடிக்கிறது, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. இதனால், தன் அரசியல் எதிர்காலத்துக்கு கெஜ்ரிவால் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குவாரோ என கலக்கத்தில் உள்ளார், ஹூடா.
இந்நிலையில் தான், வரவுள்ள லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணிக்காக, ஆம் ஆத்மியும், காங்கிரசும் ஒன்று சேர்ந்துள்ளன. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும், சமீபத்தில் டில்லியில் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதில், ஹரியானாவில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதை, ஹூடாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.
இந்த கூட்டம் முடிவடையும் வரை, அவர் தர்மசங்கடத்தில் நெளிந்தார்; முகம் இருண்டு போய் இருந்தது. கெஜ்ரிவாலிடம் கை கொடுக்க வரும்படி அவரை அழைத்தபோது, வேண்டா வெறுப்பாக கையை நீட்டினார்.
இதைப் பார்த்த சக அரசியல்வாதிகள், 'இத்தனை நாளாக கடுமையாக தாக்கி பேசி விட்டு, இப்போது கூட்டணி சேர அழைத்தால், இப்படித் தான் தர்மசங்கடம் ஏற்படும். பாவம், பூபிந்தர் சிங் ஹூடா. அவரது நிலைமை யாருக்கும் வரக் கூடாது...' என, பரிதாபப்படுகின்றனர்.

