PUBLISHED ON : ஜன 22, 2025 12:00 AM

'நல்லது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...' என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., லோக்சபா எம்.பி.,யுமான அனுராக் தாக்குர் குறித்து பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
பா.ஜ., இளைஞர் அணி தலைவராக இருந்த அனுராக் தாக்குரின் சுறுசுறுப்பான செயல்பாடுகள், கட்சி மேலிட தலைவர்களுக்கு பிடித்து போகவே, அவரை, மோடி தலைமையிலான முந்தைய அரசில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தனர்.
அவருக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருப்பதாக, பா.ஜ., மூத்த தலைவர்களே நம்பிக்கையுடன் கூறினர். ஆனால், கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் அனுராக் தாக்குர் அபார வெற்றி பெற்றும், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இது, அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதனால், கடந்த சில மாதங்களாக உற்சாகமின்றி இருந்த அனுராக் தாக்குர், இப்போது மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கியுள்ளார். விரைவில், பா.ஜ.,வில் அமைப்பு ரீதியான தேர்தல் நடக்கவுள்ளது. கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தற்போது, பா.ஜ.,வின் தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் முடிந்து விட்டதால், 50 வயதுடைய அனுராக் தாக்குருக்கு அந்த பதவி கிடைக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது.
இதை கேள்விப்பட்டதில் இருந்து, மீண்டும் உற்சாகமாக வலம் வருகிறார், அனுராக். அவரது ஆதரவாளர்களோ, 'நம்பிக்கை தானே வாழ்க்கை...' என, அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றனர்.