PUBLISHED ON : அக் 25, 2024 12:00 AM

'பட்ட காலிலேயே படும் என சும்மாவா சொன்னார்கள்...' என, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை கிண்டல் அடிக்கின்றனர், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினர்.
இங்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் ஆட்சியை பிடித்தது. ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.
ஜெகன்மோகன் முதல்வராக இருந்தபோது, சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்து பாடாய்படுத்தினார்.
அப்போது, '74 வயதான சந்திரபாபு நாயுடுவை ஏன் இப்படி அவஸ்தைபடுத்துகிறார்...' என, ஜெகன்மோகனை கடுமையாக விமர்சித்தனர் ஆந்திர மக்கள்.
இந்த அனுதாப அலை தான், சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராவதற்கு வழிவகுத்தது. இப்போது, ஜெகன்மோகனை பழிவாங்கும் முயற்சியில் இறங்கி உள்ளார், சந்திரபாபு நாயுடு.
ஜெகன்மோகன் முதல்வராக இருந்தபோது, தன் ஆன்மிக குரு ஒருவருக்கு, விசாகப்பட்டினம் அருகேயுள்ள, 15 ஏக்கர் அரசு நிலத்தை விதிகளை மீறி கொடுத்ததை, போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இந்த வழக்கில், அவரை சிக்க வைக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
'உப்பை தின்றவர் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்...' என்கின்றனர், தெலுங்கு தேசம் கட்சியினர்.