PUBLISHED ON : ஆக 09, 2025 12:00 AM

'தன் அரசியல் வாரிசுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக, எங்களை அவமதிப்பதை ஏற்க முடியாது...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கு எதிராக கொந்தளிக்கின்றனர், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள்.
மம்தா பானர்ஜி, தன் சகோதரர் மகனும், எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜியை அரசியல் வாரிசாக்குவதற்கான நடவடிக்கை களில் இறங்கியுள்ளார்.
ஏற்கனவே, கட்சியின் பொதுச்செயலர் பதவியை அவர் வகித்து வரும் நிலையில், கட்சியின் லோக்சபா குழு தலைவர் பதவியும் சமீபத்தில் அவருக்கு அளிக்கப்பட்டது.
இதற்கு முன், இந்த பதவியில் இருந்த மூத்த தலைவரான, சுதிப் பந்தோபாத்யாய், உடல்நலக் குறைவு காரணமாக பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பதவி விலகும்படி, கட்சி மேலிடத்தால் அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாக மூத்த தலைவர்களிடையே முணுமுணுப்பு எழுந்து உள்ளது.
திரிணமுல் காங்., கட்சியின் லோக்சபா கொறடாவாக இருந்த கல்யாண் பானர்ஜியும், சமீபத்தில் பதவி விலகினார். 'பார்லிமென்டில் நம் கட்சி எம்.பி.,க்கள் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லை' என, மம்தா குற்றஞ்சாட்டியதால், அவர் ராஜினாமா செய்தார்.
இதெல்லாம், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. 'இத்தனை காலமும் எங்களை போன்ற மூத்த தலைவர்களை வைத்து தானே, மம்தா கட்சியை வளர்த்தார். இப்போது மருமகன் வந்ததும், எங்கள் நடவடிக்கைகள் சரியில்லாமல் போய் விட்டனவா...' என, அவர்கள் கொந்தளிக்கின்றனர்.