PUBLISHED ON : செப் 27, 2026 01:32 AM

'கடலில் தத்தளித்தவருக்கு சிறு துரும்பு கிடைத்தால் எப்படி இருக்குமோ, அப்படிப்பட்ட மனநிலையில் தான் இப்போது அவர் உள்ளார்...' என, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குறித்து கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., படுதோல்வி அடைந்தது; மம்தாவே தோற்று போனார்.
இந்த மாற்றம் காரணமாக, திரிணமுல் காங்.,கில் விரிசல் ஏற்பட்டது. அந்த கட்சியின் 60 எம்.எல்.ஏ.,க்கள், தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. இதனால், மம்தாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குளறுபடியில் ஈடுபட்டதாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கி தவித்த மம்தா, இந்த விவகாரத்தால் உற்சாகம் அடைந்துள்ளார்.
இதையடுத்து, 'என் தோல்விக்கு ஞானேஷ்குமார் தான் காரணம்' என, மம்தா போர்க்கொடி துாக்கியுள்ளார். பா.ஜ.,வினரோ, 'மக்கள் செல்வாக்கை இழந்த பின், இதுபோன்று சாக்கு போக்கை மம்தா கூறுவது வேடிக்கையாக உள்ளது...' என கிண்டல் அடிக்கின்றனர்.
