PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

'இதெல்லாம் ஒரு கவர்னர் செய்யும் வேலையா...?' என, டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவின் செயல்பாடுகளை பார்த்து கொந்தளிக்கின்றனர், ஆம் ஆத்மி கட்சியினர்.
டில்லியில், முதல்வர் ஆதிஷி தலைமையிலானஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி, முதல்வர் பதவியைராஜினாமா செய்தார்.
'அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவேன். அதுவரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன்...' என, சபதம் செய்த கெஜ்ரிவால், தனக்கு மிகவும் விசுவாசமான ஆதிஷியைமுதல்வர் பதவியில் அமர வைத்தார்.
டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவுக்கும்,ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஆதிஷிக்கு சக்சேனா எழுதிய கடிதத்தில், 'உங்களை தற்காலிக முதல்வர் என கெஜ்ரிவால் அழைப்பது, எனக்கு வேதனையாகஇருக்கிறது. கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது எந்த வேலையையும் ஒழுங்காக பார்த்தது இல்லை. ஆனால், முதல்வருக்கான கடமையை உணர்ந்து, நீங்கள் பொறுப்புடன் பணியாற்றுகிறீர்கள்...' என, குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்து, ஆம் ஆத்மி கட்சியினர் கொதித்துப்போயுள்ளனர். 'எங்கள் கட்சியை பிளவு படுத்துவதற்காக கவர்னர் இப்படி செய்கிறார். எதிர்க்கட்சி தலைவர் செய்யும் வேலையை, கவர்னர் செய்வது நியாயமா...' என, குமுறுகின்றனர்.

