PUBLISHED ON : ஆக 28, 2026 12:00 AM

'ஆளுங்கட்சியினரால், இன்னும் என்னென்ன சிரமங்கள் ஏற்படுமோ...?' என வருத்தப்படுகின்றனர், மத்திய பிரதேச மாநில அதிகாரிகள்.
ம.பி.,யில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மோகன் யாதவுக்கும், கட்சியின் மூத்த தலைவரான நரோத்தம் மிஸ்ராவுக்கும் இடையே கோஷ்டி பூசல் நிலவுகிறது.
இங்குள்ள தாடியா சட்டசபை தொகுதியில், 2023ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர குமார் பார்தியிடம், நரோத்தம் மிஸ்ரா தோல்வி அடைந்தார். மோசடி வழக்கு ஒன்றில், ராஜேந்திர குமார் பார்திக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது எம்.எல்.ஏ., பதவி பறிபோனது.
கடந்த மாதம் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. பா.ஜ., மேலிடம், நரோத்தம் மிஸ்ராவுக்கு, 'சீட்' கொடுக்காமல், திவாரி என்பவருக்கு சீட் கொடுத்தது. தேர்தல் முடிவில் திவாரி தோல்வி அடைந்து, காங்., வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் வெற்றி பெற்று விட்டார்.
'நரோத்தம் மிஸ்ராவின் உள்ளடி வேலையால் தான், பா.ஜ., தோல்வி அடைந்தது...' என, முதல்வர் மோகன் யாதவ் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. மிஸ்ரா தரப்போ, 'பிரசாரத்துக்கு போலீசார் இடையூறு ஏற்படுத்தியதே தோல்விக்கு காரணம்...' என, கூறுகிறது.
இதையடுத்து, தாடியா மாவட்ட எஸ்.பி.,யை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளோ, 'இவர்களின் அரசியல் விளையாட்டுக்கு எங்களை பலிகடா ஆக்குவதா...?' என, கொந்தளிக்கின்றனர்.
