PUBLISHED ON : ஜன 30, 2024 12:00 AM

'ஒரே ஒரு தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு இவ்வளவு அவமானப்படுத்துகின்றனரே...' என கவலைப்படுகிறார், மத்திய அமைச்சர் பக்கன் சிங் குலஸ்தே. இவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசில், கிராமப்புற மேம்பாட்டு துறை இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மத்திய அமைச்சர்கள் சிலரும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டனர். இவர்களில், குலஸ்தேயும் ஒருவர். இங்கு பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பா.ஜ., சார்பில் போட்டியிட்ட பெரும்பாலானோர் வெற்றி பெற்றனர்.
குலஸ்தே மட்டும் தோல்வி அடைந்தார். நல்ல வேளையாக மத்திய அமைச்சர் பதவியை இவர் ராஜினாமா செய்யவில்லை. ஆனாலும், இந்த தோல்விக்கு பின், அவர் தொடர்ந்து பல கசப்பான அனுபவங்களை சந்தித்து வருகிறார். இவரது நெருங்கிய உறவினர் ஒருவர், மத்திய பிரதேச மாநில மின்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சக அதிகாரிகள், சமீபத்தில் இவரை ஜாதியை சொல்லி திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்கும்படி உயர் அதிகாரிகளிடம் கூறினார், குலஸ்தே. ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அவரது உறவினரை விட்டே அறிக்கை
வெளியிடச் செய்தனர், அதிகாரிகள். இதனால் நொந்து போன குலஸ்தே, 'இன்னும் நான் மத்திய அமைச்சராகத் தான் இருக்கிறேன். மத்திய பிரதேசத்தில் எங்கள் கட்சி தான் ஆளுங்கட்சியாக உள்ளது. ஆனால், என் பேச்சுக்கு மதிப்பே இல்லை..' என புலம்புகிறார்.