PUBLISHED ON : நவ 04, 2024 12:00 AM

'இந்த கட்சியிலும் வாரிசு அரசியல் சண்டை ஆரம்பமாகி விட்டதா...' என, தெலுங்கானாவில் செயல்படும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியில் நடக்கும் பஞ்சாயத்து குறித்து கவலையுடன் முணுமுணுக்கின்றனர், அக்கட்சியினர்.
இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தெலுங்கானாவின் சக்கரவர்த்தி என, தனக்குத் தானே கூறி வலம் வந்த, முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்.
சந்திரசேகர ராவால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில், அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், அந்த பொறுப்பை கையில் எடுத்தார்.
ஆனால், கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஹரீஸ் ராவ், இப்போது ராமாராவுக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார்.
சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது, அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் ஹரீஸ் ராவ்; தொடர்ந்து ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர்.
பாரத் ராஷ்ட்ர சமிதியின் அடிமட்ட தொண்டர்கள் துவங்கி, மூத்த தலைவர்கள் வரை அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கக் கூடியவர். இவர்தான், தற்போது கட்சி சார்பில் நடக்கும் போராட்டங்களுக்கு தலைமை வகிக்கிறார்.
'ராமாராவ் கைக்கு கட்சி போய்விடக் கூடாது என்பதில், ஹரீஸ் ராவ் தெளிவாக இருக்கிறார். கட்சி உடைந்து விடுமோ' என, தொண்டர்கள் கவலைப்படுகின்றனர்.