PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

'உத்தவ் தாக்கரேயும், அவரது ஆதரவாளர்களும் இனி என்னென்ன கிண்டலடிக்கப் போகின்றனரோ என நினைத்தால் கலக்கமாக இருக்கிறது...' என கண்ணீர் வடிக்கிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே.
உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த சிவசேனாவை இரண்டாக உடைத்து, கட்சியையும், சின்னத்தையும் தன் வசப்படுத்திய ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ., ஆதரவுடன் முதல்வராகவும் பதவி வகித்தார்.
சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிகமான இடங்களில் வெற்றி பெற்றதால், இந்த முறை, முதல்வர் பதவியை ஷிண்டேவுக்கு விட்டுத் தர, அந்த கட்சி மறுத்து விட்டது.
ஷிண்டே எவ்வளவோ பிடிவாதம் பிடித்தும், பா.ஜ., தலைவர்கள் மசியவில்லை. இதனால், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பதவியுடன் திருப்தி அடைய நேரிட்டது.
இதற்காகவே காத்திருந்த உத்தவ் தாக்கரேயும், அவரது ஆதரவாளர்களும், ஷிண்டேயை கிண்டல் அடிக்கத் துவங்கி விட்டனர். 'ஷிண்டே அணியின் ஆதரவு இல்லாவிட்டாலும், பா.ஜ.,வால் ஆட்சியை தொடர முடியும். இனி, ஷிண்டே ஒரு செல்லாக்காசு...' என, கேலி பேசுகின்றனர்.
'ஏற்கனவே என்னை, 'பா.ஜ.,வுக்கு ஒரு அடிமை சிக்கி விட்டது' என, உத்தவ் தாக்கரே கூறுகிறார். இனி, என்னவெல்லாம் பேசுவாரோ...' என புலம்புகிறார், ஏக்நாத் ஷிண்டே.