PUBLISHED ON : செப் 03, 2025 12:00 AM

'சின்ன சின்ன பிரச்னைகளை எல்லாம், சர்வதேச அரசியல் பிரச்னையாக்குகின்றனரே...' என, கவலைப் படுகிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை, தன் உறவினர் சரத் பவாரிடம் இருந்து அபகரித்ததாக, அஜித் பவார் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு உண்டு. சரத் பவார் ஆதரவாளர்கள், இதற்காக அஜித் பவாரை கடுமை யாக விமர்சித்து வருகின்றனர்.
அஜித் பவாரின் மனைவியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுனித்ரா, சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார்; இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இதை பரப்பியது, சரத் பவார் ஆதரவாளர்கள் தான். 'மதச்சார்பற்ற கட்சி என கூறிக்கொள்ளும் அஜித் பவார், மதச்சார்புடைய ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களுடன் நெருக்கமாக உள்ளார். அவரது மனைவியும், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களை அடிக்கடி சந்திப்பதுடன், அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
'சரத் பவாரிடம் இருந்து கட்சியை அபகரித்த அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் என்ற பெயரை ஏன் பயன்படுத்துகிறார்? தன் கட்சிக்கு புதிதாக வேறு பெயரை சூட்டலாமே...' என, கொந்தளித்தனர்.
அஜித் பவாரோ, 'ஆர்.எஸ்.எஸ்., தீண்டத்தகாத அமைப்பா; தேசத்துக்காக பாடுபடும் அமைப்பு தானே... சரத் பவார் ஆதரவாளர்கள் அரசியல் செய்வதற்கு வேறு விஷயமே கிடைக்கலையா...' என, புலம்புகிறார்.