PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM

'கட்சிக்குள் உள்ள சிலரே, திட்டமிட்டு என்னை அரசியலில் இருந்து ஒதுக்க நினைக்கின்றனர்...' என கவலைப்படுகிறார், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அசோக் கெலாட்.
ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து, தீவிர அரசியலில் இருந்து அவரை படிப்படியாக ஓரம் கட்டும் முயற்சி நடக்கிறது.
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, தன் மகன் வைபவ் கெலாட்டை, ஜோத்பூர் தொகுதியில் நிறுத்த திட்டமிட்டுள்ளார், கெலாட். இதற்காக, ஜோத்பூர் தொகுதியில் உள்ள காங்., நிர்வாகிகள் கருத்து கேட்கும் கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இதில் மைக் பிடித்த நிர்வாகி ஒருவர், 'கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு, வைபவ் படுதோல்வி அடைந்தார். இப்போது மீண்டும் சீட் கொடுத்து, மறுபடியும் தோல்வி அடைய வேண்டுமா?
'இந்த தொகுதியில் அசோக் கெலாட் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு தருகிறோம்; வைபவுக்கு ஆதரவு தர முடியாது...' என, வெளிப்படையாக பேசி அதிர வைத்தார். இதையடுத்து, அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக மைக்கை பறித்தனர், சக நிர்வாகிகள்.
இந்த விவகாரம், அசோக் கெலாட்டின் காதுகளுக்கு போனது. 'கட்சியில் உள்ள மற்ற மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும்போது, என் குடும்பத்துக்கு மட்டும் வாய்ப்பு மறுப்பது என்ன நியாயம்...' என கொந்தளிக்கிறார், அவர்.

