PUBLISHED ON : செப் 30, 2025 12:00 AM

'தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்தவரை உசுப்பேற்றி விட்டால் இப்படித் தான் நடக்கும்...' என, கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள சக அரசியல்வாதிகள்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இதற்கு முன் கவர்னராக இருந்த ஆரீப் முகமது கானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவியது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காதது, தினமும் அரசை விமர்சிப்பது என, எதிர்க்கட்சியினரை மிஞ்சும் அளவுக்கு கடுமையாக செயல்பட்டார் ஆரீப் முகமது கான். அவரது தொடர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பினராயி விஜயனும், அவரது ஆதரவாளர்களும் திணறினர்.
சில மாதங்களுக்கு முன், ஆரீப் முகமது கான் மாற்றப்பட்டு, ராஜேந்திர அர்லேகர் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர், முதல்வருடன் மோதல் போக்கை பின்பற்றாமல் அமைதியாகத் தான் இருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் கேரள அரசின் பள்ளி பாடப் புத்தகத்தில், 'கவர்னர் என்பவர் முதலாளி அல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதி' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் கடும் கோபமடைந்த அர்லேகர், 'ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையில்லாத இடதுசாரி கட்சியினர், சபரிமலையில் அய்யப்ப சங்கம மாநாடு நடத்துவது, வேடிக்கையாக உள்ளது. சபரிமலை பக்தர்களை ஏமாற்றி, அவர்களது ஓட்டுகளை வாங்குவதற்காக, பக்திமான்கள் போல் போலி நாடகமாடுகின்றனர்...' என, கடுமையாக விமர்சித்தார்.
'பினராயி விஜயனுக்கு இது தேவைதானா...' என, கிண்டல் அடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள்.