PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

'இவரை வெறுப்பேற்றி வேடிக்கை பார்ப்பது, பா.ஜ.,வினருக்கு விளையாட்டாகி விட்டது...' என, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவை கிண்டல் அடிக்கின்றனர், இங்குள்ள சக அரசியல்வாதிகள்.
கர்நாடக காங்கிரசில், முதல்வர் சித்தராமையா தலைமையில் ஒரு கோஷ்டியும், துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றன.
சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவியை கைப்பற்ற, சிவகுமார் முயற்சிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். இது தொடர்பாக டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பேசி, இருவரையும் சமாதானப்படுத்திய பின், பிரச்னை அடங்கும்.
சமீபகாலமாக, இது தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதி நீடித்து வந்தது. ஆனால், எதிர்க்கட்சியான பா.ஜ.,வைச் சேர்ந்த சில தலைவர்கள், 'சித்தராமையாவிடம் இருந்து விரைவில் முதல்வர் பதவியை பறிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது...' என, சமீபத்தில் கருத்து தெரிவித்தனர்.
இதைக் கேட்ட சித்தராமையா ஆவேசமாகி விட்டார். 'எங்கள் கட்சி பிரச்னையை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். இதில் எதற்கு பா.ஜ.,வினர் மூக்கை நுழைக்கின்றனர். ஐந்தாண்டுகள் தொடர்ந்து நான் தான் முதல்வர் பதவியில் நீடிப்பேன்...' என்றார்.
மற்ற கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகளோ, 'வயதான காலத்தில் சித்தராமையாவை, பா.ஜ.,வினர் ஏன் இப்படி கதற விடுகின்றனர்... அவரை பார்த்தால் பாவமாக இல்லையா...?' என்கின்றனர்.