PUBLISHED ON : ஜூன் 17, 2025 12:00 AM

'பட்டியல் ரொம்ப நீளமாக இருக்கிறதே... நம்ம ஆளுக்கு வாய்ப்பு கிடைக்குமா...' என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வின் இளம் தலைவருமான அனுராக் சிங் தாக்குரின் ஆதரவாளர்கள் விரக்தியுடன் கூறுகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில், செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக பதவி வகித்தவர், அனுராக் சிங் தாக்குர். சுறுசுறுப்பாக பணியாற்றியதால், மூத்த அமைச்சர்களே இவரது சேவையை பாராட்டினர்.
ஆனால், மூன்றாவது முறையாக மோடி அரசு பதவியேற்றபோது, அவரது அமைச்சரவையில் அனுராக் சிங் தாக்குர் இடம்பெறாதது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தற்போது, பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நட்டா, மத்திய அமைச்சராகி விட்டார். அவரது தலைவர் பதவிக்காலம் ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு விட்டது. நட்டாவுக்கு பதிலாக, அனுராக்கிற்கு கட்சி தலைவராகும் வாய்ப்பு வரும் என்ற பேச்சு முதலில் அடிபட்டது. 'வரும் ஜூலை இறுதிக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படலாம்' என, பா.ஜ., மேலிடத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.
தற்போதைய மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோரது பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
இதனால், அதிருப்தி அடைந்துள்ள அனுராக் ஆதரவாளர்கள், 'அனுபவசாலிகள் இருக்கும்போது, நம்ம ஆளுக்கு தலைவர் பதவி கிடைப்பது சந்தேகம் தான்...' என, குமுறுகின்றனர்.