PUBLISHED ON : ஜன 27, 2025 12:00 AM

'தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் இருக்கிறது; அதற்குள் நாட்களை எண்ணத் துவங்கி விட்டனரே...' என புலம்புகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரளாவில் அடுத்தாண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு ஒரே கட்சி தொடர்ச்சியாக இரண்டு முறை, ஆட்சியில் இருந்தது இல்லை என்ற வரலாறு இருந்தது.
ஒரு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அடுத்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெறும். ஆனால், கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதன் வாயிலாக, இந்த வரலாறுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை பினராயி விஜயனுக்கு உண்டு.
கடந்த, 10 ஆண்டுகளில் பினராயி விஜயனுக்கு அவரது கட்சிக்குள்ளேயே அதிகமான அரசியல் எதிரிகள் உருவாகி விட்டனர். அவரை வீழ்த்துவதற்கு மறைமுகமாக, உள்ளடி வேலை பார்த்து வருகின்றனர்.
'பினராயி விஜயன் ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக பதவி வகித்து விட்டார். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு முதல்வர் பதவி கொடுக்கக் கூடாது. இது என்ன மன்னராட்சி காலமா...' என, குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர், அதிருப்தியாளர்கள்.
பினராயி விஜயனோ, 'வாயில்லாப் பூச்சிகளுக்கு எல்லாம் தேர்தல் நெருங்கி விட்டால், விஷக்கொடுக்கு முளைக்கத் துவங்கி விடுகிறது. என்ன செய்வது, எல்லாம் என் நேரம்...' எனக் கவலைப்படுகிறார்.