
'பா.ஜ.,வினரிடம் இருந்து இவரை பாதுகாப்பதே பெரிய வேலையாக போய்விட்டது. இந்த லட்சணத்தில், எப்படி கட்சிப் பணிகளை மேற்கொள்வது...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பற்றி வேதனையுடன் கூறுகின்றனர், அந்த கட்சி நிர்வாகிகள்.
ராகுல், சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். பிரதமர் மோடியின் ஜாதி பற்றி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய பேச்சால், அவரது எம்.பி., பதவியே பறிபோனது; உச்ச நீதிமன்றம் தலையிட்டதை அடுத்து, மீண்டும் பதவி கிடைத்தது.
இதேபோல், சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் குறித்து அவர் பேசியதும் சர்ச்சையானது. இந்த விஷயங்களில், பா.ஜ.,வினர் ராகுலை கடுமையாக தாக்கிப் பேசினர்.
சமீபகாலமாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தில், 'எத்தனை இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது...' என, திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறார், ராகுல்.
இதையடுத்து, 'பாகிஸ்தானுக்கு சாதகமாக ராகுல் பேசி வருகிறார். பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருதை பெறுவதற்கான எல்லா தகுதிகளும் ராகுலுக்கு உள்ளன...' என, பா.ஜ.,வினர் காரசாரமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால், பீஹாரில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலின்போது ராகுலின் பேச்சு, காங்கிரசுக்கு பாதகமாக திரும்பி விடுமோ என, காங்., தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
'ஒரு பிரச்னை முடிவதற்குள், அடுத்த பிரச்னையில் ராகுல் சிக்கி விடுகிறார்; முடியலடா சாமி...' என புலம்புகின்றனர், காங்., மூத்த நிர்வாகிகள்.