PUBLISHED ON : டிச 27, 2025 03:24 AM

'காலம் கடந்த முயற்சி...' என, மஹாராஷ்டிரா அரசியல்வாதிகளான உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரேயின் திடீர் பாசம் குறித்து பேசுகின்றனர், அந்த மாநில மக்கள்.
சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகன் உத்தவ். பால் தாக்கரேயின் இளைய சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேயின் மகன் ராஜ் தாக்கரே.
சிவசேனாவில் உத்தவ்வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகக் கூறி அதிலிருந்து விலகிய ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை 2006ல் துவக்கினார். அவரது கட்சி, எந்த தேர்தல்களிலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இதற்கிடையே, சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், உத்தவ்வின் வலது கரமாகவும் செயல்பட்டு வந்த ஏக்நாத் ஷிண்டே, தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமானார். இப்போது சிவசேனா கட்சியும், அதன் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்று விட்டன.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - உத்தவ் என்ற கட்சி, தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 'இப்படியே இருந்தால், இன்னும் சில ஆண்டுகளில் கட்சி காணாமல் போய்விடும்' என, உத்தவ்விடம் அவரது ஆதரவாளர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, தன் சகோதரர் ராஜ் தாக்கரேக்கு நேசக் கரம் நீட்டியுள்ளார், உத்தவ்.
கடந்த, 20 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் - ராஜ் சகோதரர்கள், விரைவில் நடக்கவுள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளனர்.
'இணைந்த கைகளுக்கு வெற்றி கிடைக்குமா என, பொறுத்திருந்து பார்ப்போம்...' என்கின்றனர், அவர்களது ஆதரவாளர்கள்.

