PUBLISHED ON : செப் 21, 2024 12:00 AM

'நன்றி கெட்ட உலகமடா இது...' என விரக்தியுடன் கூறுகிறார், இந்திய மல்யுத்த வீரரும், சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்தவருமான பஜ்ரங் புனியா.
இந்திய மல்யுத்த சம்மேளன சங்க தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனையருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, கடந்த ஆண்டு பெரிய போராட்டம் நடந்தது. பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்களும் - வீராங்கனையரும் நடத்திய இந்த போராட்டம் தேசிய அளவில் பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள்எம்.பி., ராகுல் நடத்தியபாதயாத்திரையில் பங்கேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் பஜ்ரங் புனியா. அப்போது, ஹரியானாவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு தருவதாக, காங்., தரப்பில் அவருக்கு உறுதி அளிக்கப்பட்டது.
திடீர் திருப்பமாக, கடந்த மாதம் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உடல் எடை பிரச்னை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால், நாடு முழுதும் அவருக்கு ஆதரவாக அனுதாப அலை வீசியது. அவர் நாடு திரும்பியதும்,காங்கிரசில் இணைந்தார்; அடுத்த சில நாட்களிலேயே, ஹரியானா சட்டசபை தேர்தலில் அவருக்கு சீட் அளிக்கப்பட்டது. இதனால், பஜ்ரங் புனியா ஓரம் கட்டப்பட்டார்.
இதையடுத்து, 'என்னை கருவேப்பிலை போல் பயன்படுத்தி விட்டு, துாக்கி வீசி விட்டனரே...' என, புலம்புகிறார்.