PUBLISHED ON : ஜன 23, 2026 04:00 AM

'வம்பை விலை கொடுத்து வாங்குவதே இவருக்கு வழக்கமாகி விட்டது...' என, முன்னாள் மத்திய அமைச் சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மேனகா குறித்து கவலைப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
மேனகா, முன்னாள் பிரதமரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, மறைந்த இந்திராவின் இளைய மருமகள். இந்திரா உயிருடன் இருக்கும்போதே, அவருக்கும், மேனகாவுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனால், இந்திரா குடும்பத்தில் இருந்து வெளியேறிய மேனகா, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். பின், பா.ஜ.,வில் இணைந்து, மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த லோக்சபா தேர்தலில் மேனகா, சமாஜ்வாதி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். விலங்குகள் நல ஆர்வலரான மேனகா, அதற்கு எதிராக யாராவது செயல்பட்டால் கொந்தளித்து விடுவார். டில்லியில் குரங்குகளை விரட்டியவர்களை, அவர் ஓங்கி அறைந்த சம்பவங்களும் உண்டு.
இந்நிலையில், தெரு நாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதை கடுமையாக விமர்சித்திருந்தார், மேனகா.
இதனால், கோபம் அடைந்த நீதிபதிகள், தெரு நாய்கள் தொடர்பான வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, மேனகாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். 'பா.ஜ.,வில் இருந்து மேனகாவை முழுமையாக ஓரம் கட்டி விட்டனர். எந்தவித அரசியல் ஆதரவும் இல்லாத நிலையில், இனியாவது கோபத்தை குறைத்து அமைதியாக இருக்கலாமே...' என்கின்றனர், அவரது நலம் விரும்பிகள்.

