PUBLISHED ON : ஜூன் 19, 2026 02:00 AM

'மாநில கட்சிகளின் தலைவர்கள் கதற துவங்கிவிட்டனர். இவரும் அந்த வரிசையில் சேர்ந்து விட்டாரோ...?' என, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி பற்றி கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, அந்த கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் பலர், மற்ற கட்சிகளுக்கு ஓடத் துவங்கியுள்ளனர்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், அந்த கட்சியின் 60 எம்.எல்.ஏ.,க்களும், 20 எம்.பி.,க்களும் பா.ஜ., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விட்டனர்.
இதுபோல தன் கட்சியும் கரைந்து விடுமோ என கலக்கம் அடைந்துள்ள ஜெகன்மோகன், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை, தன் தாய் கட்சியான காங்கிரசுடன் இணைத்து விடலாமா என்றும் யோசித்து வருகிறார்.
இதற்காக, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவகுமாருடன் அவர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 'கடந்த 2011ல், காங்கிரசில் இருந்து பிரிந்து தான் தனி கட்சியை துவக்கினார் ஜெகன்மோகன். இப்போது மீண்டும் அங்கு ஏன் போகிறார்...?' என, தெலுங்கு தேசம் கட்சியினர் கிண்டல் அடிக்கின்றனர்.
'தாய் கட்சியுடன் மீண்டும் இணைவதில் எங்களுக்கு எந்த கவுரவ பிரச்னையும் இல்லை...' என்கின்றனர், ஜெகன் ஆதரவாளர்கள்.
